பத்மநாபபுரம் அரண்மனை காலவரையின்றி மூடல்

பத்மநாபபுரம் அரண்மனை இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது. இந்த தகவலை அரண்மனை கண்காணிப்பாளர் அஜித் குமார் தெரிவித்தார்.
பத்மநாபபுரம் அரண்மனை மூடிக்கிடந்த காட்சி
பத்மநாபபுரம் அரண்மனை மூடிக்கிடந்த காட்சி
Published on

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மனையை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகிறார்கள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் உள்ளவர்களும் இங்கு வந்து அரண்மனையை பார்த்து செல்கிறார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளிமாநில சுற்றுலா பயணிகளால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் அந்த பகுதியினரிடையே ஏற்பட்டது.

இதனால் கொரோனா பீதி ஓயும் வரை பத்மநாபபுரம் அரண்மனையை மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக அவர்கள் பத்மநாபபுரம் சப்-கலெக்டரை நேரில் சந்தித்தும் மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் அரண்மனை இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது. இந்த தகவலை அரண்மனை கண்காணிப்பாளர் அஜித் குமார் தெரிவித்தார். இதனால் அரண்மனை இன்று மூடிக்கிடந்தது. அரண்மனையை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அங்கும் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாராவது ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்க வந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com