

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் பொதுக்கூட்டம், விழாக்கள், பேரணி, போராட்டம் போன்றவற்றிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் உள்ள பார்களை இன்று முதல் மூடவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மது விற்பனை நேரம் என்றாலும் ஒரு சில இடங்களில் அதிகாலை 3 மணிக்கே பார்கள் செயல்படுகின்றன. பார்களில் நூற்றுக்கணக்கான மது பிரியர்கள் கூடுவதால் அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பார்கள் மட்டும் மூடப்பட்டுள்ளன.
பொதுமக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் செயல்பட்ட போதிலும் பார்கள் திறக்கப்படவில்லை. இதனால் மது பிரியர்கள் மது அருந்த இடமில்லாமல் திண்டாடினார்கள்.
கடையில் வாங்கிய மது பாட்டிலை குடிக்க இடம் தேடி அலைந்தனர். மது அருந்துவதற்கு தேவையான தண்ணீர், குளிர்பானம், சைடிஸ் போன்றவற்றை அருகில் உள்ள பெட்டி கடைகளில் வாங்கி அங்கு நின்றே குடித்தனர்.
டாஸ்மாக் கடைகள் உள்ள தெருக்களிலும், சாலையோரங்களிலும் நின்று குடித்து விட்டு பாட்டில்களை வீசி சென்றனர். ஒரு சிலர் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு மறைவான இடங்களை தேடி சென்றனர். மறைவாக நின்று மது அருந்த இடம் இல்லாமல் பெட்டிகடைகளிலும், ஓட்டல்களிலும் மது அருந்தினர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 970 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 680 கடைகளில் பார் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பார்கள் அனைத்தும் இன்று மூடப்பட்டது. ஒரு சில இடங்களில் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டன.
பெரம்பூர், மூலக்கடை பகுதியில் அதிகாலையில் இருந்தே பார்கள் வழக்கம் போல் செயல்பட்டன.
கொரோனா வைரஸ் பற்றிய அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் சிலர் போலீசுக்கு தெரிந்தே பார்களை திறந்து நடத்தினார்கள்.
சென்னையில் பொதுவாக பார்களில் இரவு நேரத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில் ‘பீர்’ பிரியர்களின் கூட்டம் அதிகரித்தது.
இந்த நிலையில் பார் மூடப்பட்டதால் மது பிரியர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். பார்களை மூடியபோதும் மதுக்கடையில் கூட்டம் குறையவில்லை. வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.