

தஞ்சை:
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாக தஞ்சாவூர் விளங்கி வருகிறது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய தஞ்சை பெரிய கோவிலை காண உலகெங்கிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தஞ்சைக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 5-ந்தேதி பெரிய கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பெரிய கோவிலில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி செய்தனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவில், சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் வருவதை குறைத்து கொள்ளுமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதன் காரணமாக தஞ்சை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வருகையை தவிர்த்தனர். இதனால் பெரிய கோவிலில் கூட்டம் குறைந்து வெறிச்சோடியது.
இருப்பினும் கும்பாபிஷேகம் நடைபெற்றதன் காரணமாக தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் சிலர் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இன்று காலை முதல் தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில பக்தர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து அவர்கள் மட் டும் விரைவாக தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.
காலை 10 மணியில் இருந்து கோவில் நுழைவு வாயில் மூடப்பட்டது. இதுபற்றி தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகிற 31-ந்தேதி வரை பக்கர்கள் செல்ல அனுமதி கிடையாது. கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.