

கோவை:
சென்னை, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
வார இறுதி நாட்களில் கேரளா செல்லும் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும். இதற்காக முன்பதிவு செய்ய டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும். ஆனால் கொரோனா வைரஸ் பீதி காரணமாக கேரளாவுக்கு செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் தற்போது அதனை ரத்து செய்து வருகின்றனர்.
3 நாட்களில் மட்டும் 15 சதவீத முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கேரளா செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
பாலக்காடு மாவட்டம் சித்தோடு தாலுகா அணிக்கோடு சந்திப்பில் கேரள திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் செயல்பட்டு வந்த 2 தியேட்டர்கள், 25-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள், மலம்புழா அணை பூங்கா, திப்புசுல்தான் கோட்டை, காஞ்சிரப்புழா அணை, மங்கலம் அணை பூங்கா, போத்துண்டி அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அனைத்தும் கொரோனா பீதியால் மூடப்பட்டன.
இதேபோல் திருமண நிகழ்ச்சிகளை எளிதில் நடத்த வேண்டும் எனவும், கோவில் திருவிழாக்களை நடத்த வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை விமான நிலையம், பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கோவை விமான நிலையத்திற்கு வெளி நாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் கேரளாவில் இருந்து வரும் அரசு பஸ்கள், ரெயில்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தின் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ குழுவினர், சுகாதார துறையினர் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் பஸ், கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனை செய்கின்றனர்.
மேலும் அந்த வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.மேலும் இரவு நேரங்களில் டெப்போவில் நிறுத்தப்படும் பஸ்களை முழுவதுமாக சுத்தம் செய்யவும் டிரைவர் கண்டக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக கேரளாவில் இருந்து பஸ்சில் வரும் பயணிகள் மாஸ்க் அணிந்தபடியே வருகின்றனர்.
கோவை ரெயில் நிலையத்தில் கேரளாவுக்கு செல்லும் ரெயில், அங்கிருந்து கோவை வரும் ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக வால்பாறை அருகே கேரளா செல்லும் சாலையில் உள்ள வாழைச்சால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிகள் நேற்று முதல் மூடப்பட்டன.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் நீர்வீழ்ச்சிகள் மூடப்பட்டதால் அந்த சாலையில் தற்போது வாகன போக்குவரத்து குறைந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் உள்ளது. இது கேரள கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்போது கேரளாவில் கொரோனா பரவியதை அடுத்து பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நேற்று முதல் பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் அடைக்கப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.