ராணிப்பேட்டை மாவட்டத்தில் 415 பேர் கொரோனாவால் பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் திவ்யதர்ஷினி கூறினார்.
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரிசோதனை
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 415 பேர் கொரோனாவால் பாதிககப்பட்டு உள்ளனர். இதில் 293 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 120 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

வாலாஜா அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நல மையத்தில் 128 பேர் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் வீடுகளில் மொத்தம் 918 பேர் தனிமைப்படுத்திப்பட்டுள்ளனர்.

வணிகர் சங்கங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். ஆலோசனை முடிவில் நாளை (20-ந் தேதி) முதல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கடைகளை காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே திறந்து வைப்பதாக முடிவு செய்துள்ளதாக வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கும்.

மாவட்ட எல்லையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்டறிய தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை, அப்படி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னையில் லாக்டவுன் அறிவித்த பின்னர் அங்கிருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தீவிர சோதனைக்கு பின்னர் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாலாஜா அரசு கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களால் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 117 இடங்கள் கொரோனா பாதித்தவர்கள் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக பாதிப்பு உள்ள 8 இடங்கள் மட்டும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து வதந்திகள் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாலாஜாவில் தனியார் துணிக்கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு என வதந்தி பரவியது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com