

திருச்சி:
வெளிநாடுகளில் இருந்து திருச்சி திரும்பியவர்களில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய 117 பேர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர்களின் ரத்தம், சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் தவிர மற்றவர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் 14 நாட்கள் தீவிர காண்காணிப்பில் இருந்தனர். மேலும் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்த நிலையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து 61 பேர் நேற்று அவர்களின் வீடுகளுக்கு செல்ல மருத்துவக்குழுவினர் பரிந்துரைத்தனர்.
அவர்களின் உறவினர்கள் கல்லூரிக்கு வந்து உடமைகளுடன் அந்த 61 பேரையும் அழைத்து சென்றனர். இதற்கிடையே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 32 பேரும் குணமாகி விட்டதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் 32 பேரும் இன்று ஒரே நாளில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அனைவரும் முகக்கவசம் அணிந்தவாறு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டை விட்டு வெளியே வந்தனர்.
அனைவரும் தங்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய டாக்டர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர், செவிலியர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
32 பேரையும் 6 ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஒரு பேருந்தில் ஏற்றி கலெக்டர் சிவராசு, மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா ஆகியோர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள 67 வயது முதியவர் மற்றும் 1 வயது குழந்தை ஆகியோரின் உடல்நிலை தேறி வருகிறது.