

புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
தலைநகர் டெல்லியில் நேற்று வரை 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதில் 21 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இவர்களிடம் இருந்து உள்ளூரில் மேலும் 6 பேருக்கு பரவி உள்ளது.
இதையடுத்து டெல்லியில் வருகிற 31-ந்தேதி வரை முடக்கம் செய்யப்படுவதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்தார். இதுதொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-
வருகிற 31-ந்தேதி வரை டெல்லி முடக்கம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இது அவசியமாகும்.
முடக்கத்தின்போது மெட்ரோ ரெயில் இயங்காது. அண்டை மாநிலங்களை இணைக்கும் மெட்ரோ ரெயில்கள் இயங்காது. அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களும் நிறுத்தப்படும். அத்தியாவசிய சேவைகளுக்காக 25 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படும்.
பால் விற்பனையகங்கள், மளிகைக் கடைகள், மருந்த கங்கள், பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம்.கள் ஆகியவை மட்டும் திறந்திருக்கும். அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் 72 லட்சம் பேருக்கு ரேஷன் பொருட்களை வழங்கி உள்ளோம். ஓய்வூதியத்தை இரட்டிப்பு செய்துள்ளோம்.
ஆந்திராவில் இதுவரை 6 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அம்மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் வருகிற 31-ந்தேதி வரை ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில முதல்- மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட இங்கு குறைவாக உள்ளது. எனினும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்களும், ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வீதம் உதவித் தொகையும் வழங்கப்படும் என்றார்.