

தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த ஒருவர் குஜராத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் ஊருக்கு செல்ல முடிவு செய்த அவர் அங்கிருந்து லாரி மூலம் ஊருக்கு கிளம்பி உள்ளார்.
நேற்றுமுன் தினம் நள்ளிரவு தனது ஊரான புளியம்பட்டிக்கு வந்தார். இவர் வரும் தகவல் அறிந்த அவரது மனைவி மற்றும் மகள் கொரோனா அச்சம் காரணமாக தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இதற்கிடையே குஜராத்தில் இருந்து கொரோனா தொற்றுடன் ஒருவர் ஊருக்குள் நுழைந்து விட்ட தாக அந்த ஊர் முழுவதும் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியான அப்பகுதி மக்கள் சுகாதாரதுறை மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் யாரும் வர வில்லை. இதனால் அதிருப்தியான அப்பகுதியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அந்த பகுதியில் உள்ள கோவில் மரத்தடியில் குடும்பத்தினரோடு தஞ்சம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மாம்பாடி பஞ்சாயத்து அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேசி குஜராத்தில் இருந்த நபருக்கு பரிசோதனை செய்யப்படும் என்று கூறியதோடு அவரது வீட்டின் முன்பு தனிமைப் படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கரையும் ஒட்டி சென்றனர்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே குஜராத்தில் இருந்து வந்த நபருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.