

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதன்படி மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர், கெட்டூரை சேர்ந்த மருந்தாளுனர், பளிஞ்சரஅள்ளியை சேர்ந்த சுகாதார பணியாளர் ஆகியோருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் தீர்த்தமலை பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர், அரூர் மேல்பாட்ஷாபேட்டையை சேர்ந்த ஒப்பந்ததாரர், அரூர் கோவிந்தசாமி நகரை சேர்ந்த வக்கீல் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அரூர் கெலாப்பாறையை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர், சிகரலஅள்ளியைச் சேர்ந்த வியாபாரி மற்றும் 5 மாணவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் செட்டிக்கரையில் உள்ள கொரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களையும் சேர்த்து இதுவரை மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,353 ஆக அதிகரித்துள்ளது.