கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு 7-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை

தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை 7-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு 7-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை
Published on

புதுடெல்லி:

தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை விதித்த தடையை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூட்டுறவு சங்க தேர்தலுக்கான தடையை நீக்கி கடந்த மாதம் 20-ந் தேதி உத்தரவிட்டது.

எனினும் தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான நிலவர அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி இதுவரை நடைபெற்ற 2 கட்ட தேர்தல் தொடர்பான நிலவர அறிக்கையை பிரமாண பத்திரமாக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அமரேந்திர சரண், தான் மற்றொரு முக்கியமான வழக்கில் கோர்ட்டுக்கு ஆலோசனை வழங்கும் வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு விசாரணைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு (இன்று) ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிபதிகள், நாளை (இன்று) பல்வேறு முக்கியமான வழக்குகள் விசாரணைக்கு வர இருப்பதால், தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் குறித்த வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு (7-ந் தேதி) ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் கோர்ட்டு உத்தரவின்படி நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பா.வினோத் கன்னா கோரிக்கை விடுத்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போது முடிவு எதுவும் எடுக்க முடியாது என்றும், திங்கட்கிழமையன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அது குறித்து விசாரிக்கலாம் என்றும் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com