ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆரோக்கியதாஸ் உள்பட 13 பேர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்தது. இதன்பின்பு தமிழ் மொழியின் வரலாறு, கலாசாரத்தை பரப்பும் வகையில் சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் கடந்த 2007-ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 2012-ம் ஆண்டு பேராசிரியர், விரிவுரையாளர், அலுவலக பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. நாங்கள் முறையாக தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறோம். எங்களை பணி நீக்கம் செய்து விட்டு புதியவர்களை பணியில் அமர்த்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் நாங்கள் பாதிப்புக்கு உள்ளாவோம். எனவே, பேராசிரியர், விரிவுரையாளர், அலுவலக பணியாளர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து விட்டு எங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல் கார்த்திக், ‘மனுதாரர்களை நியமிக்கும் போது, இந்த பணியிடங்களுக்கு ஒப்புதல் பெறவில்லை. முறையான தேர்வு விதிகளும் வகுக்கப்படவில்லை. சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால் அவர்களை பணிநிரந்தரம் செய்ய முடியாது’ என்று வாதிட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மனுதாரர்கள் 13 பேரும் முறையாகத்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய பணியாளர் தேர்வு விதிகள் கொண்டு வரப்படுவதற்கு முன்பே அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களை பணிநிரந்தரம் செய்ய எந்த தடையும் இல்லை.

4 மாதங்களுக்குள் மனுதாரர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பேராசிரியர், விரிவுரையாளர், அலுவலக பணியாளர் பணியிடங்களை நிரப்ப செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com