பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் பிழை: ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் இருந்த பிழையை சரிசெய்ய தவறியதால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனருக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் பிழை: ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த ஒரு பிளஸ்-2 மாணவியின் மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்ததால் அவரது தந்தை ஜமீல் பாட்ஷா சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் வேதியியல் பாட செய்முறை தேர்வு மதிப்பெண்ணில் 50 என இருப்பதற்கு பதிலாக 5 என பிழையாக இருந்தது. அது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்த போது அவர்கள், பள்ளி கல்வி துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பினர். அசல் சான்றிதழ் கிடைக்கும் போது பிழை திருத்தப்பட்டிருக்கும் என உறுதி அளித்தனர்.

ஆனால் 2012 மார்ச் 30-ந்தேதி அளிக்கப்பட்ட அசல் சான்றிதழில் செய்முறை தேர்வு மதிப்பெண் 5 என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் ஏப்ரல் 13-ந்தேதி தான் திருத்தப்பட்ட அசல் சான்றிதழ் வழங்கப்பட்டது. எனவே சேவை குறைபாடால், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க பள்ளி நிர்வாகத்திற்கும், பள்ளிக் கல்வி இயக்குனருக்கும் உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர்கள் கே.அமலா, டி.பால்ராஜசேகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பிழையுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதால் சரியான நேரத்தில் மனுதாரரின் மகள் உயர்கல்வியில் சேர முடியவில்லை என மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டுள்ளார். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 21 நாட்களில் திருத்தப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழை பள்ளிக்கல்வி துறை வழங்கியுள்ளது.

ஆனாலும் தவறான மதிப்பெண் சான்றிதழ் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே தனியார் பள்ளி நிர்வாகம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் மனுதாரரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரத்தை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com