அரசியல் சாசனம் மீது மத்திய மந்திரி சர்ச்சை கருத்து: காங். ஒத்திவைப்பு நோட்டீஸ்

அரசியல் சாசனத்தில் உள்ள ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை நீக்கப்படும் என்று மத்திய மந்ரிதி அனந்த் குமார் ஹெக்டே பேசியுள்ளது குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது. #WinterSession
அரசியல் சாசனம் மீது மத்திய மந்திரி சர்ச்சை கருத்து: காங். ஒத்திவைப்பு நோட்டீஸ்
Published on

புதுடெல்லி:

கர்நாடக மாநிலம் குகானூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி அனந்த்குமார் ஹெக்டே, மக்கள் தங்களை தங்களின் மத அடையாளத்தோடு பெருமையோடு அழைத்துக் கொள்ள வேண்டும். தங்களை மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் சொந்த அடையாளமே தெரியவில்லை என்று பேசினார்.

மேலும், அரசியல் சாசனத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அரசியல் சாசனம் பல முறை மாற்றப்பட்டிருக்கிறது என்றார். மதசார்பற்ற என்ற வார்த்தையும் மாற்றப்படும் என்றும் அதை மாற்றுவதற்காகவே தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மந்திரியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. நான்கு நாள் விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றம் இன்று கூட இருக்கும் நிலையில், மக்களவையில் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.

அவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு மந்திரியின் பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மன்மோகன் சிங் மீதான பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கடந்த வாரம் முழுவதும் அவை அமளியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  #WinterSession

X

Maalai Malar
www.maalaimalar.com