மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் தியோராவுக்கு முகேஷ் அம்பானி ஆதரவு

மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்து உள்ளார். #MukeshAmbani #Congress
மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் தியோராவுக்கு முகேஷ் அம்பானி ஆதரவு
Published on

மும்பை:

காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி முரளி தியோரா. கடந்த 2014-ம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார்.

இவரது மகன் மிலிந்த் தியோரா. இவரும் மத்திய மந்திரியாக இருந்து உள்ளார்.

தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 42 வயதான மிலிந்த் தியோரா மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

2004, 2009 தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர் கடந்த தேர்தலில் சிவசேனாவிடம் தோற்றார். 4-வது முறையாக அவர் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

ரிலையன்ஸ் குழும அதிபரான அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-

தெற்கு மும்பை என்றாலே தொழில் என்கிறார்கள். மும்பையின் தொழில்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 10 ஆண்டுகளாக மிலிந்த் தியோரா மும்பை தெற்கு தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார். தெற்கு மும்பையில் உள்ள பொருளாதாரம், சமூகம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை ஆழமாக அறிந்தவர். அவரது தலைமையில் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் வளம் பெறும்.

இவ்வாறு முகேஷ் அம்பானி வீடியோவில் கூறி தியோராவுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.

ரபெல் விவகாரத்தில் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது ஆச்சரியமான ஒன்றாகும். அதே நேரத்தில் முகேஷ் அம்பானி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததால் பா.ஜனதாவும், சிவசேனாவும் அதிர்ச்சி அடைந்து உள்ளன.

இதே போல ஆசியாவின் மிகப் பெரிய கோடீசுவரர்களில் ஒருவரான உதய் கோடக்கும் காங்கிரஸ் வேட்பாளர் தியோராவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். #MukeshAmbani #Congress

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com