

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கபில்சிபல் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் பொருளாதாரத்தை மாற்றுவதாக கூறிக்கொண்டு இந்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சாதாரண மனிதர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்த வகையில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர், இப்போது சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) சாமானியர்கள் மீதான 2-வது பெரிய தாக்குதலை ஏற்படுத்தி உள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்த நினைத்த ஜி.எஸ்.டி.யை இந்த அரசு அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் உருவாக்க நினைத்தது, ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற திட்டம். அது நல்லது, எளிமையானது.
ஆனால் இப்போது அரசு செயல்படுத்தி இருக்கும் ஜி.எஸ்.டி.யில் பலமுனை வரிகள் உள்ளது. இதுதவிர மாநில அரசுகளும் தங்கள் வரியை விதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் ரூ.100-க்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யும், ரூ.100-க்கு அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி.யும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசு 30 சதவீதம் வரி விதிக்கிறது. இந்த வரிகளின் சுமை அனைத்தும் சாதாரண மனிதர்களின் மீது தான் திணிக்கப்படும். இதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
ரூ.20 லட்சத்துக்கு கீழ் வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகள் 80 சதவீதம் உள்ளதாக ஜி.எஸ்.டி.யில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்றவர்களான இந்த சிறுவியாபாரிகள் ஜி.எஸ்.டி.யில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனாலும் அவர்கள் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக அவர்கள் 37 விண்ணப்பங்களை பூர்த்திசெய்து கொடுத்துள்ளனர்.
சிறிய கார்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி.யும் சாமானியர்களையே பாதிக்கும். அந்த வாகனங்களை உற்பத்தி செய்பவர்கள் நிச்சயம் விலையை உயர்த்திவிடுவார்கள்.
இதுதவிர சாமானிய மக்கள் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள், காலணி, சமையல் பாத்திரங்கள், பிஸ்கட்டுகள், கைக்கெடிகாரம், எழுதுபொருட்கள் ஆகியவைகளுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யால் 50 சதவீத தளவாடங்கள் விற்பனை நின்றுபோனது.
நாட்டில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த மாநில அரசுகளில் தான் சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவை சோதனைகள் நடத்துகின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக இருப்பவர்களிடம் எங்குமே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படவில்லை.
பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மட்டுமே பரிசுத்தமானவர்கள், மற்றவர்கள் அனைவருமே கறைபடிந்தவர்கள் என கருதுகிறார்களா? இதற்கு அரசு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.