தீபா அலுவலகத்தில் மோதல் - கைகலப்பு

தீபா பேரவையை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பதவி கேட்டு ரூ. 5 லட்சம் கொடுத்தவர்கள், அந்த நிர்வாகியிடம் பணத்தை திரும்ப கேட்டதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
தீபா அலுவலகத்தில் மோதல் - கைகலப்பு
Published on

சென்னை:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை அவரது அண்ணன் மகள் தீபா தொடங்கினார்.

தொடக்க காலத்தில் இந்த அமைப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று கட்சி தொண்டர்கள் கருதினர்.

இதனால் அந்த பேரவையில் பதவிகளை பெறுவதற்கு கடும் போட்டி ஏற்பட்டது.

இதை காரணம் காட்டி நிர்வாகிகள் சிலர் வசூல் வேட்டையிலும் ஈடுபட்டனர். ஆனால் மெல்ல மெல்ல தீபா பேரவை வேகம் இழந்தது. பல்வேறு அமைப்புகளுடன் இதுவும் ஒரு சாதாரண அமைப்பாக மாறிப் போனது.

இதனால் அந்த அமைப்பில் இருந்தும் பயன் இல்லை. பதவிகள் வாங்கினாலும் எந்த மரியாதையும் இல்லை என்ற சூழ்நிலைக்கு தொண்டர்கள் சென்றனர்.

பதவி பெற்றவர்களும் கட்சி பணிகளில் தீவிரம காட்டவில்லை. பதவி கேட்டு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்கள் மட்டும் ஆதங்கத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபா பேரவை அலுவலகத்துக்கு பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த சிலர் வந்தனர்.

அவர்கள் தீபா பேரவையை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பதவி கேட்டு ரூ. 5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நிர்வாகியிடம் கொடுத்த பணத்தை அவர்கள் திரும்ப கேட்டனர்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். குறிப்பிட்ட கால அவகாசத்தை கொடுத்து அதற்குள் பணத்தை திருப்பி தராவிட்டால் போலீசில் புகார் செய்வோம் என்று எச்சரித்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com