

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் 21-வது காமன்வெல்த் கேம்ஸ் போட்டி ஏப்ரல் 4-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்திய ஹாக்கி அணி கலந்து கொண்டு விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 18 பேர் கொண்ட பட்டியலை ஹாக்கி இநதியா அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் முடிவடைந்த சுல்தான் அஸ்லான் ஷா தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ருந்த சர்தார் சிங் நீக்கப்பட்டுள்ளார். நடுகள வீரர் மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கே சிங்லேன்சானா சிங் துணைக் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, இங்கிலாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஏப்ரல் 7-ந்தேதி நடக்கிறது.
இந்தியா கடைசி இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் 2-வது இடத்தையே பிடித்தது.