வாணியம்பாடி அருகே பாலாற்று புல்லூர் தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

வாணியம்பாடி அருகே பாலாற்றில் புல்லூர் தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்தார். மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புல்லூர் தடுப்பணையில் பாலாற்றில் மூழ்கிய மாணவன் உடலை தேடும் பணி நடந்த காட்சி.
புல்லூர் தடுப்பணையில் பாலாற்றில் மூழ்கிய மாணவன் உடலை தேடும் பணி நடந்த காட்சி.
Published on: 

வாணியம்பாடி:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-ந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே புல்லூர் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

புல்லூர் தடுப்பணை நிரம்பி வேலூர் மாவட்ட பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. புல்லூர் தடுப்பணையை பார்வையிடுவதற்காக நாள் தோறும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகிறார்கள்.

தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் ஆபத்து கருதி யாரும் குளிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

மேலும் ஆந்திர போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் புல்லூர் தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமத்தை சேர்ந்த கருணா என்பவரின் மகன் அசோக் (வயது 21) மற்றும் இவரது நண்பர் ஜமான் கொல்லையை சேர்ந்த தேவராஜ் மகன் அருண்குமார் (21) ஆகிய 2 பேரும் நேற்று மாலை புல்லூர் தடுப்பணைக்கு சென்றனர்.

அப்போது அசோக்கும், அருண்குமாரும் புல்லூர் தடுப்பணையில் இறங்கி குளித்தனர். அவர்கள் நீரில் மூழ்கினர். இன்று காலை வரை 2 பேரும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்களுடன் புல்லூர் தடுப்பணைக்கு சென்றனர்.

தடுப்பணையில் அவர்கள் மூழ்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டு தேடினர். மேலும் குப்பம் போலீசார் மற்றும் குப்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அசோக்கின் உடல் மட்டும் பிணமாக மீட்கப்பட்டது. அருண்குமார் கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீட்கப்பட்ட அசோக் உடல் குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புல்லூர் தடுப்பணையில் மூழ்கிய 2 வாலிபர்களும் வாணியம்பாடியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தனர்.

X