

வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு விழிப்புணர்வும், கொசு ஒழிப்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை, கலெக்டர் ராமன் நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன்படி, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிகொண்டா டோல்கேட்டில் கலெக்டர் ராமன் இன்று காலை டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியை ஆய்வு செய்தார்.
அப்போது, சுங்கச்சாவடி சுற்றியும் பழைய டயர், ஆயில் டப்பாக்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் சுகாதாரமின்றி குவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப்புழு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பள்ளி கொண்டா சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். தேவைப்பட்டால் சுங்கச்சாவடி நிர்வாகம் மீது வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இதையடுத்து, அணைக்கட்டு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை பார்வையிடுவதற்காக கலெக்டர் புறப்பட்டு சென்றார். அணைக்கட்டு தாசில்தார் மதிவாணன், பேரூராட்சி செயல் அலுவலர் நிஷாந்த், வருவாய் ஆய்வாளர் சத்யா, கிராம நிர்வாக அலுவலர் சக்கர வர்த்தி, சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
வாலாஜா காகிதக்கார தெரு, டிரங்க்ரோடு பகுதியில் நகராட்சி கமிஷனர் அசோக் குமார் ஆய்வு செய்தபோது, அங்குள்ள 2 பழைய இரும்பு சாமான் கடைகளில் கொசு உற்பத்தியாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவருக்கும் தலா ரூ.800 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல், ஆம்பூர் கே.எம்.நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டில் கொசுப் புழு உற்பத்தியாகி இருந்ததால் அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.