

கோவை ஆர்.எஸ்.புரம் சீனிவாசராகவன் தெருவில் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு செல்வபுரம் செட்டிவீதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 42) என்பவர் ஊழியராக வேலை பார்த்தார்.
நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தங்க, வைர நகைகளை பாஸ்கரன் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று இதேபோல பெட்டிகளில் வைத்து ஏராளமான தங்க, வைர நகைகளுடன் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் சென்றார். விற்ற நகைகள் போக மீதி உள்ள நகைகளுடன் நிறுவனத்துக்கு திரும்பினார். ஊழியர்கள் மீதி நகைகளை சரி பார்த்தனர். அப்போது 752 கிராம் தங்க நகைகள் மற்றும் 70 கேரட் வைர நகைகள் என மொத்தம் ரூ.61 லட்சத்து 28 ஆயிரத்து 951 மதிப்பிலான நகைகளை காணவில்லை.
இதுகுறித்து நிறுவன அதிகாரிகள் பாஸ்கரனிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனினும் காணாமல் போன நகைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என பாஸ்கரன் கூறினார். இதையடுத்து நிறுவன அதிகாரி சாஸ்தாமணி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
நகை திருடியவர்களை பிடிக்க துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பாஸ்கரனின் செல்போனில் இருந்து யார்-யாரிடம் பேசினார் என பட்டியல் சேகரித்து போலீசார் விசாரித்தனர்.
மேலும் நகை தயாரிப்பு நிறுவனத்தின் முன்புறம் உள்ள கண்காணிப்பு கேமிரா மற்றும் நிறுவனத்தை சுற்றி உள்ள வணிகவளாகங்கள் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.
இதில் பாஸ்கரன் நகைகளை திருடி அவற்றை வேறு சிலரிடம் கொடுக்கும் காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் பாஸ்கரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் நகைதிருட்டில் ஈடுபட்ட அவரது கூட்டாளிகளான பேரூரை சேர்ந்த ஆனந்தன் (38), செல்வபுரத்தை சேர்ந்த தங்கவேல் (41), அசோக்நகரை சேர்ந்த ரூபன் (25), கரும்புக் கடையை சேர்ந்த அப்பாஸ் (35) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதில் தங்கவேல், ஆனந்தன் ஆகியோர் நகை பட்டறை நடத்தி வருகின்றனர். தங்க வேலின் நகைபட்டறையில் பாஸ்கரன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வேலை பார்த்துள்ளார். அப்போது பாஸ்கரன் அங்கிருந்த 1 கிலோ தங்க நகைகளை திருடி உள்ளார். அதனை திருப்பிக் கேட்ட போது சில நாட்களில் திருப்பி தந்து விடுகிறேன் என கூறி சமாளித்து வந்தார்.
பின்னர் பாஸ்கரன் ஆர்.எஸ்.புரத்தில் தங்கநகை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும் அங்கிருந்து நகைகளை திருடி தருகிறேன் என கூறி உள்ளார். இதை நம்பிய தங்கவேல் சில மாதங்கள் பொறுமையாக இருந்தார்.
சம்பவத்தன்று தனது நிறுவனத்தில் இருந்து தங்க, வைர நகைகளை விற்பனைக்காக கொண்டு சென்ற பாஸ்கரன் அதில் சிறிய அளவு நகைகளை திருட திட்டம் தீட்டினார். அதனை தங்க வேலிடம் தெரிவிக்கவே அவர் தனது நண்பர்களான ஆனந்தன், ரூபன், அப்பாஸ் ஆகியேருடன் சேர்ந்து பாஸ்கரனிடம் இருந்து திருட்டு நகையை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தங்கவேல் வீட்டில் இருந்து நகை களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். #tamilnews