

சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிக் காலத்தில் காலமான 62 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 75 பொதுவியல் பொறியாளர்கள் மற்றும் 25 இயந்திரவியல் பொறியாளர்கள், என மொத்தம் 100 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.