

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெடுஞ்சாலைத் துறையின் திட்ட செயலாக்கம் மற்றும் நிர்வாக பணிகளுக்கு உதவிட இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு அலகுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 550 இளநிலை உதவியாளர் பணியிடங்களில் எற்படும் காலிப் பணியிடங்கள் அவ்வப் போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நேரடியாகவும், கருணை அடிப்படையிலும் மற்றும் பதவி உயர்வின் மூலமும் நிரப்பப்படுகின்றன.
அந்தவகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 89 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை திறம்பட கண்காணிக்கவும், துறையின் வளங்களை பாதுகாக்கவும், வளங்களை சீராக ஒதுக்கிடவும், திட்டங்கள் குறித்த தகவல்களை பொது மக்களுக்கு அளித்திடவும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை நெடுஞ்சாலைத் துறை உருவாக்கியுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையின் வலைதளமானது, உபயோகிப்பவர்களின் வசதிக்காகவும், எளிதாக பயன்படுத்தும் வகையிலும், புதியதோற்றப் பொலிவுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையின் வலைதளத்தினை (http://www.tnhighways.gov.in) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
இதன்மூலம், பொது மக்கள் வலைதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களை எளிதாக பார்வையிட இயலும். மேலும், புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த வலைதளம், மாற்றுத் திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் ஒலி வடிவத்துடனும், எழுத்துரு அளவு மற்றும் வண்ணங்களை மாற்றும் அம்சங்களோடும் உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் கோதண்டராமன் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும், பொன்னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம், வகுப்பறைக் கட்டடங்கள், நூலகக் கட்டடம் மற்றும் இதர துறைக் கட்டடங்கள்; மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் 8 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்ணமீன் வானவில் தொழில்நுட்ப பூங்கா;
பவானிசாகரில் உள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீர் மற்றும் உணவு தர ஆய்வகம் மற்றும் சீனமுறை மீன்குஞ்சு பொரிப்பகம்; என 19 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கான கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம்-முட்டத்தில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரியில் 13 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள வகுப்பறைகள், கருத்தரங்குக் கூடம் மற்றும் நூலகக் கட்டடம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள வண்ணமீன் வானவில் விற்பனைக் கடைகள் மற்றும் காட்சிக்கான நிலையம் ஆகியவற்றிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.