போரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.54 கோடி செலவில் கட்டப்பட்ட போரூர் மேம்பாலத்தை திறந்து வைத்து எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினார்.
போரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
Published on

போரூர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரூ.54கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களே பாலத்தை திறந்தனர். பின்னர் முதல்- அமைச்சர் திறப்பதற்காக மூடப்பட்டது.

இந்த மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முறைப்படி திறந்து வைத்தார். வாகனப் போக்குவரத்தை தொடங்கி வைத்து அவரும் பாலத்தில் காரில் பயணம் செய்தார். இந்த பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டது.

திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

புரட்சித் தலைவி அம்மா நல்லாசியோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நினைவு கொள்ளும் விதத்தில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் இந்தபாலம் பொது மக்களுடைய பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலம், பல்வேறு பிரச்சினைக்கு இடையிலே இன்றைய தினம் நிறைவு பெற்று திறப்புவிழா காண்கின்றது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் நிலம் கையகப்படுத்தாமலேயே இந்தப் பாலப் பணியை துவக்கி விட்டார்கள். புரட்சித் தலைவி அம்மா 2011-ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் இந்தபாலம் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலே ஆணையிட்டார். அவரது ஆணைக்கிணங்க பாலப் பணியை துவக்குகின்ற போது, பாலத்திற்கு தேவையான நிலம் இல்லாத காரணத்தால் பாலப் பணி நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நிலத்தினுடைய உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தால், தீர்ப்பை பெற்று இந்த பாலப் பணியை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்தப் பாலம் அமைகின்ற சாலையின் அடிப்பகுதியிலே மாநகராட்சியின் குடிநீர் குழாய் செல்கிறது. அதை அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது.

பலமுறை ஒப்பந்தம் கோரியும் ஒப்பந்தம் எடுக்க யாரும் முன்வராத காரணத்தால் அதற்கு மாற்று ஏற்பாடாக அந்த நீர் குழாயை மாற்றி, அந்த குடிநீர் குழாய்க்கு எவ்வித பாதிப்பும் உண்டாகாத அளவுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மறு ஒப்பந்தம் இடப்பட்டது. ரூ. 54 கோடி செலவில் நிறைவு பெற்று, திறக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com