புதுவையில் ஜனநாயகத்தை கிரண்பேடி குழிதோண்டி புதைத்துவிட்டார்- நாராயணசாமி ஆவேசம்

புதுவையில் கவர்னர் கிரண்பேடி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையை செய்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
Published on

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் கிரண்பேடி 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு கண்டு இருப்பதாக பத்திரிகைகளில் படித்தேன். அதை பார்த்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது.கவர்னர் மாளிகை புகார் பெறும் அலுவலகம் அல்ல.

அவர் எந்த புகாரை பெற்றாலும் முதல்- அமைச்சர் வழியாக சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்ப வேண்டும். புகார்களை விசாரிப்பது கவர்னரின் வேலை அல்ல. அவர் விசாரணை அதிகாரியும் அல்ல. புகார்களை நேரடியாக விசாரிக்கும் அதிகாரமும் அவருக்கு இல்லை.

கவர்னர் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையை செய்து வருகிறார். ஜனநாயகத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாக செயல்படுகிறார். மக்கள் மத்தியில் தன்னைப்பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.

அவர் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். தனிப்பட்ட முறையில் அவருக்கு புகார் பெற அதிகாரம் இல்லாத நிலையில் 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளேன் என்பது நம்ப முடியாதது.

அரசியலமைப்பு சட்டத்தையோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையோ அவர் மதிப்பது கிடையாது. பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்.

புதுவை மக்களின் வளர்ச்சிக்கு கவர்னர் எதுவும் செய்யவில்லை. திட்டங்களை தடுத்து நிறுத்தியதுதான் அவரது சாதனை. தொடர்ந்து புதுவை மக்களுக்கு அவர் துரோகம் செய்து வருகிறார். இவரால் மக்கள் வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com