புதுவையில் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுவையில் சிவப்பு ரே‌ஷன் கார்டுதாரர்கள் தவிர விடுபட்ட அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி.
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி.
Published on

புதுச்சேரி:

மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுவையில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிவப்பு ரே‌ஷன் கார்டுதாரர்கள்.

இவர்கள் தவிர விடுபட்ட அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என நாராயணசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

ஆயுஷ்மான் பாரத் என்ற மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட அனைவரையும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைக்க உள்ளோம். இதனால் அரசுக்கு ரூ.18 கோடி செலவாகும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம். இத்திட்டம் வரும் மார்ச், ஏப்ரலில் நடைமுறைக்கு வரும்.

சென்னை ஐகோர்ட் தீர்ப்பிற்கு பிறகும் கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். அதிகாரிகளை நேரில் அழைத்து மிரட்டுவது, வசைபாடும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இலவச அரிசி திட்டத்திற்கு பதிலாக பணம்தான் தர வேண்டும் என மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் நாங்கள் இலவச அரிசி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளோம். புதுவை அரசு உருவாக்கிய இலவச அரிசி திட்டத்தில் அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதாக விதிமுறையே கிடையாது. மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நாங்கள் கோர்ட்டிற்கு செல்ல உள்ளோம்.

மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கு கவர்னர் கிரண்பேடி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தின் பேரில் விதிமுறைப்படி மாநில தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தலைமை செயலர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும் என கூறவில்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மாநில தேர்தல் ஆணையரை நீக்க வேண்டுமென்றால் நீதிபதிகளை நீக்கும் முறையைத்தான் கடைபிடிக்க வேண்டும்.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் சபாநாயகரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

எனவே அவரை நீக்க முடியாது. அவரை நீக்க மத்திய உள்துறைக்கோ, கவர்னருக்கோ அனுமதி கிடையாது. கவர்னரின் உத்தரவை குப்பைத்தொட்டியில்தான் போட வேண்டும். மத்திய அரசு யூனியன் பிரதேசங்களில் சிறந்ததாக புதுவையை தேர்வு செய்துள்ளது. 9 துறைகளில் 4 துறையில் முதலிடம் பெற்றுள்ளோம்.

நிதி ஆயோக்கும் நிர்வாகத்தில் சிறந்ததாக புதுவையை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து மக்களுக்கான பணிகளை, சேவைகளை திறம்பட புதுவை அரசு மேற்கொள்ளும்.

இதற்கான தடைக்கல் வரும் ஆண்டில் தூக்கி எறியப்படும். விரைவில் அதிகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் ஷாஜகான் உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com