எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னையில் நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பிரதமரை அழைப்போம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
Published on

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். எடப்பாடி பழனிசாமி பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் எப்போது நடைபெறும்?

பதில்:- விரைவில் நடைபெறும்.

கே:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பிரதமரை அழைப்பீர்களா?

ப:- பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அவர் நேரம் ஒதுக்கித் தந்த உடனே எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்துவோம்.

கே:- தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அதில் ஒரு மீனவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்க எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்?

ப:- இது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு மீனவரை மீட்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அம்மாவின் அரசு பிரதமருக்கு வேண்டுகோள் வைக்கும்.

கே:- ஹஜ் பயணிகளுக்கு மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதே?

ப:- தமிழக அரசை பொறுத்தவரை மத்திய அரசிடம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்.

கே:- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். தொடர்ச்சியாக மருத்துவ மாணவர்களின் தற்கொலை வடமாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது?

ப:- தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு படிக்க செல்லும் தமிழக மாணவர்கள் தமிழக அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறோம். மாணவர்கள் பதிவு செய்யாததால் இவ்வளவு குழப்பம் ஏற்படுகிறது. இருந்தாலும் வெளிமாநிலத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கே:- டி.டி.வி.தினகரன் புதிய கட்சி அறிவிப்பேன் என்று கூறியுள்ளாரே?

ப:- நீங்கள் அவரைத்தான் கேட்க வேண்டும்.

கே:- தினகரன் கட்சி ஆரம்பித்தால் அ.தி.மு.க.வுக்கு என்ன பாதுகாப்பு ஏற்படும்?

ப:- ஒரு பாதிப்பும் ஏற்படாது. 10 வருடம் அவர் கட்சியிலேயே இல்லை. அப்போது பாதிப்பா ஏற்பட்டது. 10 ஆண்டு காலம் அவர் எங்கே போனார் என்று ஊடகங்கள் அனைவருக்கும் தெரியும். ஊடகங்களும், பத்திரிகைகளும் தான் அவரை பெரிதுபடுத்துகின்றன. மக்கள் யாரும் அவரை நினைக்கவில்லை.

கே:- உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளதா?

ப:- தயாராக இருக்கிறோம்.

கே:- அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் ஒரு கடிதம் எழுதி இருந்தார். தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தாரே?

ப:- அது உள்கட்சி பிரச்சினை. குடும்ப பிரச்சினையை யாராவது வெளியில் பேசுவார்களா? அது எங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினை. அதெல்லாம் தெளிவாக்கப்பட்டு இருக்கிறது. அண்ணனும் மன நிறைவு பெற்றிருக்கிறார்.

கே:- அ.தி.மு.க.வுக்கு நாளிதழ் எப்போது தொடங்கப்படும்?

ஓ.பன்னீர்செல்வம் பதில்:- கூடிய விரைவில் அ.தி.மு.க.வுக்கு நாளிதழ் தொடங்கப்படும்.

கே:- இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தைப் பற்றி சொல்லுங்களேன்?

ஓ.பன்னீர்செல்வம்:- இன்று எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா தலைமைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. அரசு சார்பாக எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கிண்டியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தமிழக மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். தலைமைக்கழக நிர்வாகிகளும் இங்கு வந்திருந்த கட்சியினரும் கலந்து பேசிய கலந்துரையாடல்தான் நடந்தது. வேறு முக்கிய விஷயம் பற்றி எதுவும் பேசவில்லை.

கே:- நீங்கள் டெல்லிக்கு செல்கிறீர்களா?

ஓ.பன்னீர்செல்வம் பதில்:- டெல்லியில் ஒவ்வொரு வருடமும் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் மத்திய நிதி அமைச்சரால் கூட்டப்படும். அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் இன்று டெல்லி செல்கிறேன்.

கே:- பிரதமரை சந்தித்து பேசுவீர்களா?

ஓ.பன்னீர்செல்வம் பதில்:- தேவைப்பட்டால் பிரதமரை சந்தித்து பேசுவேன்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com