

சென்னை:
சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
* அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அத்தொழிலாளர் இயற்கை மரணம் அடைந்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை 15,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதே போன்று அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஈமச்சடங்கு உதவித் தொகை 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
3 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள்
தற்போது தமிழகத்தில் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், ஆலங்காயம், ஜோலார்பேட்டை ஆகிய வட்டாரப் பகுதி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் வாணியம்பாடியிலும், ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், அந்தியூர், பவானிசாகர், தாளவாடி ஆகிய வட்டாரப் பகுதி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் கோபி செட்டிப்பாளையத்திலும், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஆகிய வட்டார பகுதி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் கோட்டூரிலும் தலா 200 மாணவ-மாணவியர் தொழிற்பயிற்சி பெறும் வகையில் விடுதியுடன் கூடிய 3 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் 28 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் துவக்கப்படும்.
தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், நடப்பாண்டில் ஒட்டன்சத்திரம், நெல்லியாளம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், பவானி, குன்னூர், கீழ்குண்டா (ஊட்டி), பாப்பிரெட்டிப்பட்டி, அரவக்குறிச்சி, பூதலூர் ஆகிய பத்து இடங்களில் புதிய தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் 12 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் திறக்கப்படும்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
* மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களின் உயரிய பண்பாட்டுப் பாரம்பரியத்தினைப் பறைசாற்றும் வகையில், தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய அருங்காட்சியகம் 50 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும். இதற்கென இந்த ஆண்டு முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக ‘சிங்காரவேலர் விருது’ ஆண்டுதோறும் சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளோடு வழங்கப்படும்.
விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கிப் பொன்னாடை அணிவித்து விருதாளர் சிறப்பிக்கப்படுவார்.
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 4,750 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் திருத்தலங்களுக்கு சென்று வழிபட மானியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 500லிருந்து 1000 ஆக உயர்த்தப்படும். நடப்பு நிதியாண்டில் இதனால் அரசுக்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
2017-18ஆம் ஆண்டில், கிராமக் கோயில்களைப் புதுப்பிப்பதற்காக கோயில் ஒன்றிற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதுடன், இத்திட்டத்தில் பயன்பெறும் கோயில்களின் எண்ணிக்கை 500லிருந்து 1000 ஆக இரட்டிப்பாக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு கிராமப்புறங்களில், குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலிருந்து அதிக கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளதால், திருப்பணி செய்யப்படும் இத்தகைய கிராமப்புற திருக்கோயில்களின் எண்ணிக்கை 2000 ஆக உயர்த்தப்படும். இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் திருக்கோயில் நிதியிலிருந்து 20 கோடி ரூபாய் செலவிடப்படும்.
நடப்பாண்டில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 11 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு 13 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.
* மெட்ரோ ரெயில் திட்டத்தின், இரண்டாம் கட்டமாக 45.77 கி.மீ. நீளத்தில் மாதவரத்திலிருந்து சிறுசேரி வரையிலும், 17.12 கி.மீ. நீளத்தில் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரையிலும் மற்றும் 44.66 கி.மீ. நீளத்தில் மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் மொத்தம் 107.55 கி.மீ. நீளத்தில் மூன்று மெட்ரோ ரெயில் வழித்தடங்களை 85,047 கோடி ரூபாய் என்ற உத்தேச மதிப்பீட்டளவில் செயல்படுத்துவதற்கு மாநில அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காகவும், நிதியுதவிக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலங்கரை விளக்கத்தில் இருந்து வடபழனி வழியாக சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நான்காவது வழித்தடத்தினை விருகம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் ஆற்காடு சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, கலங்கரை விளக்கம் முதல் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை நீட்டிப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கான விரிவான துணை திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்ளும். இத்திட்டத்தினை செயல்படுத்துவதால் சுமார் 3,850 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
* சென்னையைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான விரிவான சாத்தியக்கூறு-திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியினை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்ளும்.
இத்திட்டத்திற்கு மத்திய அரசின் மூலமாக ஜெர்மன் நிதி நிறுவனமான கே.எப்.டபுள்யூவிடம் நிதியுதவி பெறப்படும்.
தமிழ்நாடு வனத்துறையில் காடுகளின் உட்பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வேட்டைத் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் 908 வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திரத் தொகுப்பு ஊதியம் 6,750 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.