ராயபுரம்:
ஜெயலலிதா மரணத்தால் காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 145 மனுக்களில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டன. இன்று பிற்பகல் 3 மணியுடன் மனுக்கள் வாபஸ் பெறுவது முடிகிறது. மாற்று வேட்பாளர்கள் அனைவரும் இன்று தங்கள் மனுவைத் திரும்பப் பெற்றனர்.
இன்று மாலை ஆர்.கே.நகர் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் என்னென்ன என்பது அதிகாரபூர்வமாக தெரிய வரும்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்கள். இதனால் ஆர்.கே.நகரில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவருக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. இவர்களின் ஆதரவாளர்கள் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை 7 தடவை அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 2 தடவை வெற்றி பெற்றுள்ளது. ஜெயலலிதா போட்டியிட்ட காரணத்தால் இந்த தொகுதி கடந்த 2 தேர்தல்களிலும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருந்தது.
அவர் மறைந்த நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடப்பதால் இந்த தொகுதியை எப்படியாவது கைப்பற்றி தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தீவிரமாக உள்ளது. அதே சமயத்தில் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெறுவதை தி.மு.க. முக்கியமாக கருதுகிறது.
இதன் காரணமாக அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் ஆதரவு திரட்டுவதை தீவிரமாக்க தொடங்கியுள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதுசூதனனை வெற்றி பெற செய்யும் வியூகம் வகுப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நேற்று தண்டையார்பேட்டையில் அ.தி.மு.க.வினருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரத்தை எந்தெந்த வகையில் முன்னெடுத்துச் சென்று நடத்த வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
இன்று (வியாழக்கிழமை) காலை அவர்கள் இருவரும் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்கள். முதலில் அவர்கள் காலை 10.30 மணிக்கு காசிமேடு எஸ்.என். செட்டி தெருவில் அ.தி.மு.க. கிளை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
பிறகு அங்கு அவர்கள் அ.தி.மு.க. தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கொருக்குப்பேட்டைக்கு சென்றனர். அங்கு அரிநாராயணபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டனர். பிறகு அந்த தெருவில் பிரசாரத்தை தொடங்கினார்கள்.
அந்த பகுதியில் அவர்கள் இருவரும் வீதி வீதியாக திறந்த காரில் நின்றபடி சென்று மதுசூதனனுக்கு ஆதரவு திரட்டினார்கள். மதியம் வரை அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தெரு முனைகளில் நின்று பேசினார்கள். அப்போது இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
அவர்களுடன் வேட்பாளர் மதுசூதனன், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, மாபா பாண்டியராஜன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா, மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஒரே காரில் நின்றபடி சென்றனர். அவர்கள் பின்னால் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கட்சி கொடியையும், இரட்டை இலையையும் ஏந்தி சென்றனர்.
கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகே பிரசார வாகனத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு உங்களை நாடி, உங்கள் வீட்டுப்பிள்ளை மதுசூதனன் வந்துள்ளார். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
புரட்சித்தலைவி அம்மா ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்று முதல்-அமைச்சரான பிறகு இந்த தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை வாரி வழங்கினார். பலர் இந்த தொகுதியில் எம்.எல்.ஏ. ஆகி இருந்தாலும், தொகுதி முன்னேற்றத்துக்கு வளர்ச்சி திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை.
அம்மா தேர்வான பிறகு தான் உங்கள் தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் வந்துள்ளன. இப்பகுதி பொருளாதார மேம்பாடு அடைய நடவடிக்கை எடுத்தார்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெற செய்தால் தொகுதி வளம் பெறும் என்று கூறுகிறார். மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தவர். சென்னை முழுவதும் மாநகராட்சி கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
ஆர்.கே.நகர் தொகுதிக்காக, இங்கு வாழும் மக்களுக்காக அவர் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
அவர் துணை முதல்வராகவும் இருந்தார். அப்போதும் இந்த பகுதி மக்களுக்காக அவர் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
இங்கு அம்மா வென்ற பிறகே ஆர்.கே.நகர் தொகுதிக்கு விடிவு காலம் பிறந்தது. ஏழை எளியவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அவர் தீட்டினார்.
அவரது மேலான திட்டங்களை தொடர நீங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “ஆர்.கே.நகர் தேர்தல் ஒரு நல்ல சூழலில் சாதனையை நிகழ்த்தி காட்டி, இரட்டை இலையை பெற்று உங்களை நாடி வந்துள்ளோம். இங்கு போட்டியிடும் மதுசூதனன் உங்கள் அனைவருக்கும் பரீட்சயமானவர்.
இந்த தொகுதியில் அவர் கால்படாத இடமே இல்லை. பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்பவர்.
அம்மா விட்டுச் சென்ற பணிகள் செம்மையாக தொடர மதுசூதனனை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.