

பூதலூர்:
பூதலூர் வட்டாரத்தில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பொதுசுகாதார துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறை பணியாளர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். பூதலூர்வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பூதலூர் வட்டாரத்தில் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களையும், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்தவர்களையும் தனிமைப்படுத்தி தினமும் அவர்களின் உடல் நிலை குறித்து சோதனை செய்து வருகின்றனர்.
பூதலூர் வட்டாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 112 பேர் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் 95 பேர் 28 நாள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர். அதே போல் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் வந்து தனிமைப்படுத்தப்பட்ட 232 பேரில் 28 நாள் முடிந்த 72 பேர் விடுவிக்கப்பட்டனர்.
மீதமுள்ள 177 பேருக்கு மருத்துவ துறையினர் அவரவர் வீடுகளுக்கு சென்று சளி, காய்ச்சல் இருக்கிறதா என்று சோதனை செய்து வருகின்றனர். நேற்று திருச்செனம்பூண்டி கிராமத்தில் வெளி மாவட்டங்களில் வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நடமாடும் மருத்துவ குழு டாக்டர் அபிராமி வெப்பமானி கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது திருச்செனம் பூண்டி ஊராட்சிதலைவர் வடிவழகன் வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.