புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு பிரார்த்தனை

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு பிரார்த்தனை
Published on

நாகர்கோவில்:

2017-ம் ஆண்டு முடிந்து நாளை 2018-ம் ஆண்டு பிறக்கிறது. இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொள்கிறார்.

குழித்துறை மூவொரு ஆலயத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் பி‌ஷப் ஜெரோம்தாஸ் பங்கேற்கிறார். நாகர்கோவில் கிரைஸ்ட் சர்ச்சில் நடைபெறும் பிரார்த்தனையில் சி.எஸ்.ஐ. பி‌ஷப் தேவகடாட்சம் கலந்து கொண்டு செய்தி அளிக்கிறார்.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. வெளிநாடுகளிலும் இருந்தும் வெளி மாநிலங்களிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஓட்டல்களில் குவிந்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட் டத்தை வரவேற்கும் விதத்தில் ஓட்டல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

நள்ளிரவு 1 மணிக்கு பின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தக்கூடாது, நீச்சல் குளத்திற்கு மேல் மேடை அமைக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டையொட்டி பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை கூறியதாவது:-

புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஷிப்ட் முறையில் வாகன சோதனை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும், குடிபோதையில் பெண்களை கேலி-கிண்டல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா தலங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.#tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com