

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 88 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்காம்ப் 69 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மழைக் காரணமாக இன்றைய 3-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வார்னர் சதம் அடித்தார். அவர் 209 பந்தில் 5 பவுண்டரிகளுடன் இந்த சதத்தை அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 234 பந்தில் 7 பவுண்டரியுடன் 123 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் மந்தமான சதத்தை பதிவு செய்துள்ளார். வார்னர் ஒரு அதிரடி ஆட்டக்காரர். இதனால் குறைந்த பந்திலேயே சதம் அடிப்பது வழக்கம். இதற்கு மாறாக இந்த டெஸ்டில் மிகவும் மெதுவாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
இதற்கு முன் இந்தியாவிற்கு எதிராக 2014-ல் 154 பந்தில் சதம் அடித்ததே மந்தமான சதமாக இருந்தது. தற்போது அதை மிஞ்சிவிட்டார். 2011-ம் ஆண்டு ஹோபர்ட்டில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 145 பந்திலும், 2015-ல் நியூசிலாந்துக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் 141 பந்தில் அடித்த சதங்கள் மந்தமான சதமாகும்.