ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்: முதல்வர் பேட்டி

ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்: முதல்வர் பேட்டி
Published on

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் அதிமுக-வின் நிலைப்பாடு என்ன?

பதில்: நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் இப்பொழுது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவாக முடிவு செய்து அறிவிப்போம்.

கேள்வி: தமிழக அமைச்சர்களில் ஒரு அமைச்சர், பா.ஜ.க. ஒன்றும் தீண்டத்தகாத கட்சியில்லை, அதனால் ஆதரவு கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

பதில்: இதுவரைக்கும் எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.

கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைவதாக ஒரு தகவல் வந்துள்ளது, அதற்கு நீங்கள் ஏதாவது பரிந்துரை செய்திருக்கிறீர்களா?

பதில்: எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரையில், ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கு அமைய வேண்டுமென்று மத்திய அரசிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனையை, மத்திய அரசு தமிழகத்தில் அமைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள், குடிநீர், நீட் தேர்வு, மாட்டிறைச்சி என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்காமல் மௌனமாக இருக்கிறார் என்று,

பதில்: நீட் தேர்வைப் பொறுத்தவரை எத்தனை முறை பேட்டி கொடுத்தேன் என்று உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். பத்திரிகைக்கும் தெரியும், பாரதப் பிரதமரை மூன்று முறை சந்தித்த போது, நீட் தேர்வு குறித்து அவரிடத்திலே, விவரமாக விளக்கமாக கூறியிருக்கிறேன். தமிழக மாணவர்கள், ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள். ஆகவே, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கவேண்டுமென்று பலமுறை கோரிக்கை வைத்திருக்கின்றேன், உங்களுக்குத் தெரியும்.

கேள்வி: மாட்டிறைச்சி சம்பந்தமாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்: இன்னும் மத்திய அரசினுடைய முழுமையான அறிக்கை கிடைக்கப்பெறவில்லை. அது கிடைத்தவுடன் எங்களுடைய நிலைப்பாட்டை கூற முடியும். அதற்கிடையிலே மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், எதிர்க்கட்சியினுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற கருத்தையும் தெரிவித்திருக்கின்றார்.

கேள்வி: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு...?

பதில்: ஏற்கனவே நான் தெரிவித்திருக்கின்றேன். மக்களுக்கு எந்தவகையில் பாதிப்பு ஏற்படுத்தினாலும், அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று ஏற்கனவே தமிழக அரசின் நிலைப்பாட்டை கூறியிருக்கிறேன்.

கேள்வி: தமிழக அரசு ஸ்திரத்தன்மையற்ற அரசு என்று ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். இரண்டு அணிகளின் இணைப்பு சம்பந்தமாக என்ன நடவடிக்கை நீங்கள் எடுக்க இருக்கிறீர்கள்?

பதில்: இங்கே இருக்கிற ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகள் வாயிலாகவும் நான் தெரிவித்துக்கொள்வது, தமிழக அரசு வலுமையாக இருக்கின்றது. 123 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு, ஒரு வலிமையான கட்சியாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஏராளமான திட்டங்களை, இந்த அரசு, குறுகிய காலத்திலே விரைந்து செயல்பட்டு, இன்றைக்கு மக்கள் மனத்திலே இடம்பெற்றிருக்கிறது. பொறுக்க முடியாதவர்கள், வேண்டுமென்றே, திட்டமிட்டு அவதூறான செய்திகளை இன்று பரப்பி வருகிறார்கள்.

கேள்வி: மருத்துவர்கள் பற்றாக்குறை...?

பதில்: மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற கேள்வி எழவில்லை. இருந்தாலும், அரசு, காலியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எப்பொழுது பார்த்தாலும் இந்த அரசு பினாமி அரசு, சுனாமி அரசு, ஜெராக்ஸ் அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அம்மாவினுடைய அரசைப் பொறுத்தவரை, இது நிலையான அரசு. மக்கள் என்ன எண்ணுகின்றார்களோ, அதை நிறைவேற்றுகின்ற அரசாக இன்று இருந்து கொண்டிருக்கிறது. அத்தனை பேருக்கும் நன்றாகத் தெரியும், உங்கள் பத்திரிகை, ஊடகங்களுக்கும் தெரியும், அடிக்கடி, பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் சந்தித்து பேசினால் தான் அந்த அரசு இருக்கிறதென்று நினைக்காதீர்கள். எங்களுடைய செயல்பாடுகளை நான் ஏற்கனவே பொதுக்கூட்டத்திலே அழகாக பேசியிருக்கின்றேன்.

இன்றைக்கு கல்லூரியை திறந்து வைத்துப் பேசியிருக்கின்றேன். பேசுவது மட்டுமல்ல, செயல்பாட்டினுடைய திறமையையும் நாங்கள் காட்டிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, அம்மாவினுடைய அரசு, நிலையான அரசு, உறுதியான அரசு, 123 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசு. இவர்களுடைய ஆட்சிகாலத்திலே, மைனாரிட்டி அரசாக இருந்தது. எங்கள் ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை இதன் வாயிலாக தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com