முதல் அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய சென்னை வாலிபர் சிறையில் அடைப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்பிய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் ரியாஸ் கான். இவர் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ரியாஸ்கான் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதலமைச்சர் குறித்தும், அமைச்சர்கள் குறித்தும் சமூக வலைத்தளத்தில் சிலர் அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பியது சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவரின் மகன் சுதர்சன் (வயது 22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று சுதர்சனை பிடித்து கோவைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் வேலை செய்து வந்ததாகவும், தனது நண்பரான தி.மு. க.வை சேர்ந்த ஒருவரின் தூண்டுதலின் பேரில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com