

சென்னை:
சென்னை அன்னை சத்யா நகரைச்சேர்ந்தவர் விஜயா. இவரது கணவர் வேலு. 13 ஆண்டுகளுக்கு முன் இவர்களது 2 வயது ஆண் குழந்தை விக்ரம் கடத்தப்பட்டான். பல இடங்களில் தேடி வந்தனர். இது பற்றி அப்போது அவர்கள் போலீசில் புகார் எதுவும் செய்யாமல் விட்டு விட்டனர்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி விஜயா தனது வீட்டில் டி.வி.நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது குடும்ப பிரச்சனைகளை விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சியில் காண்டிராக்டர் ஞானசேகரன் என்பவர் கலந்து கொண்டார். அவரைப் பார்த்ததும் விஜயா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த டி.வி அலுவலகத்துக்கு சென்று இவர் தான் தனது குழந்தையை கடத்தியவர் என்று கூறினார்.
இதையடுத்து ஞான சேகரனையும், விஜியாவையும் சந்திக்க வைத்து பேச்சுவார்த்தை நடத்த டி.வி. நிறுவனம் ஏற்பாடு செய்தது. அதற்கு விஜியா சம்மதிக்க ஞானசேகரன் வராமல் புறக்கணித்து விட்டார்.
இதையடுத்து ஞானசேகரனின் விலாசத்தை டி.வி. நிறுவனம் மூலம் சேகரித்துக்கொண்ட விஜயா திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். தனது மகன் விக்ரம் என்ற மனோஜ்குமாரை தனது பக்கத்துவீட்டுக்காரரான ஞானசேகரன் கடத்திசென்று விட்டார். தற்போது அவர் காண்டிராக்டராக செல்வாக்குடன் இருக்கிறார். அவரிடம் இருந்து மகனை மீட்டுக்கொடுங்கள் என்றார்.
உடனே போலீசார் ஞான சேகரனை வரவழைத்து விசாரித்த போது அவர் வேறு மாதிரியாக தெரிவித்தார். விஜயலட்சுமிக்கு 4 குழந்தைகள் இருந்தது. சிறுவன் விக்ரம் பவுர்ணமியில் பிறந்தவன் என்றும் அவனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததால் விஜயா தான் தன்னிடம் குழந்தையை கொடுத்தாள் என்றார்.
தற்போது அந்தகுழந்தை தனது 3-வது மனைவி சாந்தியிடம் வளர்வதாகவும், ஐ.சி. எப்.பள்ளியில் 9-ம் வகுப்பு படிப்பதாகவும் தெரிவித்தார்.
போலீசார் சிறுவன் விக்ரமை அழைத்து கவுன்சிலிங் மூலம் நடந்த விவரங்களை கூறி ஆலோசனைகள் வழங்கினார்கள். பெற்றோரிடம் செல்கிறாயா? என்று கேட்டதற்கு ஞானசேகரன் -சாந்தி தம்பதியைத்தான் அவன் பெற்றோராக நினைத்துக்கொண்டு இருப்பது தெரியவந்தது.
முடிவாக வார இறுதி நாட்கள் மட்டும் பெற்ற தாயான விஜயாவிடம் செல்வதாகவும் மற்ற நாட்களில் ஞானசேகரன் வீட்டிலேயே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தான். ஆனால் இந்த சமரசத்தை ஏற்க விஜயா மறுத்துவிட்டார். நான்பெற்ற பிள்ளை எனக்கு சொந்தம், என்னுடனேயே அவன் எப்போதும் இருக்க வேண்டும், பகுதி நேரம் மட்டும் இருக்க சம்மதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதையடுத்து சிறுவன் விக்ரம் ஞானசேகரனுடனேயே சென்றுவிட்டான். சிறுவனின் விருப்பத்துக்கு மாறாக தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் கோர்ட்டு மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
இதனால் விஜயா ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். மகனை மீட்க கோர்ட்டை அணுகுவது என்று முடிவு செய்து இருக்கிறார்.