கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்குமா? 16-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #karthichidambaram
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்குமா? 16-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
Published on

சென்னை:

ஐ.என்.எக்ஸ். மீடியா அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கிய விவகாரத்தில் பணம் கைமாறியதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அவரது அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதுடன், அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது. 

இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் கோரிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டே முடிவு செய்யலாம் என கூறி வழக்கை சென்னைக்கு மாற்றியது.

இந்நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. கார்த்தியின் மனுவுக்கு மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ. தரப்பில் 12-ம் தேதி பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ.  தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு பலமுறை ஆஜராகாததால் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும், வெளிநாடு சென்றால் சாட்சிகளை அழித்துவிடுவார் என்றும் சி.பி.ஐ. தெரிவித்தது.

இதையடுத்து, இவ்வழக்கில் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அப்போது தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

அதேசமயம், லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசும் சி.பி.ஐ.யும் பிப்ரவரி 21-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #tamilnews #karthichidambaram

X

Maalai Malar
www.maalaimalar.com