பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு

புதுவையில் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால், பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு
Published on

பாகூர்:

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.

இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வரும் திருச்செந்தூரை சேர்ந்த யஷ்வந்தய்யா (28) என்பவர் பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது.

இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தாம்பத்திய உறவில் யஷ்வந்தய்யாவுக்கு நாட்டம் இல்லாததால் அவர் மீது இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் விசாரித்த போது, யஷ்வந்தய்யா பெண்ணாக இருந்து ஆணாக மாறி அறுவை சிகிச்சை செய்திருப்பது இளவரசிக்கு தெரியவந்தது.

இதனால் யஷ்வந்தய்யாவை பிரிந்து இளவரசி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி இளவரசியை யஷ்வந்தய்யா சந்தித்தார். அப்போது இருவரும் சேர்ந்து வாழலாம் என அவர் இளவரசியிடம் வற்புறுத்தினார்.

ஆனால், இதற்கு இளவரசி சம்மதிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த யஷ்வந்தய்யா பாட்டிலில் தயாராக எடுத்து சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் யஷ்வந்தய்யா அலறி துடித்தார். பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் உருண்டு புரண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யஷ்வந்தய்யாவை மீட்டு அவர் வேலை பார்க்கும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு யஷ்வந்தய்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com