

பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த மணலி புதுநகரில் மாதவரம் வடக்கு 16 வது வட்ட தி.மு.க. சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இப்போது 60 வயது 69 வயதில் ஓய்வு எடுக்க வேண்டிய நடிகர்களுக்கு படவாய்ப்புகள் முடிந்த பின்னர் மக்கள் ஞாபகம் வருகிறது. அவர்களால் அரசியலில் சாதிக்க முடியாது. இது நடக்காது. நடக்க போவது இல்லை.
எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் வந்து ஒன்றும் இல்லாமல் போயிருக்கிறார்கள். நானும் நடிகர் விஜயகாந்த்தும் ஓரே ஊரில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தோம். 1982-ல் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தோம் சிறைசென்றோம் கலைஞருக்கு விழா எடுத்தோம்.
அதனால் தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். நடிகர்கள் அரசியலுக்கு வரும் போதே வெற்றிடத்தை நிரப்ப வருகிறேன் என்கிறார்கள். வெற்றிடம் என்ற ஒன்று கிடையவே கிடையாது.
ஜெயலலிதா மறைந்து விட்டார். கலைஞர் ஓய்வெடுக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் நடிகைகள் அரங்கத்திற்குள் வரும் போது அரங்கத்தின் சேரில் அமர வேண்டும். அதில் தான் வெற்றிடம் உள்ளது.
மேடையில் வந்து அமர கூடாது. மேடையில் தலைவராக அமர இன்னும் அதிக காலம் இருக்கிறது. இன்னும் 6 மாதத்தில் தேர்தல் நிச்சயம் வரப்போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சுதர்சனம், வட்ட கழக செயலாளர் கண்ணப்பன், அறிவழகி பாலகிருஷ்னன், பரந்தாமன், நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews