புறவாசல் வழியாக ஆட்சி அமைக்க தி.மு.க. முயற்சி: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு

தமிழகத்தில் புறவாசல் வழியாக தந்திரமாக நுழைந்து ஆட்சி அமைக்க தி.மு.க.வினர் முயல்கிறார்கள் என்று பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
புறவாசல் வழியாக ஆட்சி அமைக்க தி.மு.க. முயற்சி: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு
Published on

நாகர்கோவில்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியில் இணைவதற்கு முக்கிய பிரமுகர்கள் முதல் ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிற கட்சிகளில் இருந்தும் பாரதீய ஜனதாவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். வட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பாரதீய ஜனதாவில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள்.

இன்று கூட பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், திருத்தணி தொகுதியைச் சேர்ந்தவருமான ரவிராஜன் பாரதீய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இவருடன் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் எங்கள் கட்சியில் சேருவார்கள்.

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது குறித்து இப்போது எந்த கருத்தும் கூற முடியாது. இந்த விவகாரம் ஐகோர்ட்டு விசாரணையில் இருப்பதால் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் நேர்மையான, நிலையான, ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும். ஆனால் இந்த ஆட்சியை அகற்றி விட்டு புற வாசல் வழியாக தந்திரமாக நுழைந்து ஆட்சி அமைக்க தி.மு.க.வினர் முயல்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத கிருமி போல் அவர்கள் செயல்படுகிறார்கள்.

கழகங்களை ஒழித்து விட்டு தமிழகத்தில் கழகம் இல்லா ஆட்சியை உருவாக்க பாரதீய ஜனதா முயற்சி செய்து வருகிறது.

தமிழக மாணவ-மாணவிகளுக்காக நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டேன். நாடு முழுவதும் 62 பள்ளிகளை உருவாக்க அறிவிப்பு வெளியான போது தமிழகத்தில் 10 பள்ளிகளையாவது கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி செய்தேன். இதற்காக அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அதன்பிறகு பதவிக்கு வந்த ஓ.பன்னீர் செல்வம், இப்போது ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து கடிதம் கொடுத்தேன்.

இப்போது நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோர்ட்டு அறிவித்துள்ளது. இதற்காக பாராட்டு தெரிவிக்கிறேன். இந்த பள்ளிகள் அமைந்தால் தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். அவர்களின் கல்வித்தரம் உயரும். நீட் தேர்வு போன்ற தேர்வுகளில் அவர்கள் வெற்றி பெறுவார்கள். கடந்த ஆண்டு நவோதயா பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதிய 18 ஆயிரம் பேரில் 11 ஆயிரம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

நவோதயா பள்ளிகளை திறந்தால் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கழகங்களை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் தமிழுக்கு துரோகம் இழைத்ததே தி.மு.க. தான். நவோதயா பள்ளிகளை வேண்டாம் என்பவர்கள் தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதற்கு என்ன கூறுகிறார்கள். தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த தயாராக இருக்கிறார்களா?

மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் சாதாரண மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வரி செலுத்த தகுதியுள்ளவர்களை வரி விதிப்புக்குள் கொண்டு வரவே ஜி.எஸ்.டி. அறிமுகம் ஆனது. இதனால் சாதாரண மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் தர்மலிங்க உடையார், மணிசுவாமிகள், தேவ், வேல்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து பாரதீயஜனதா கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com