கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் - வதந்தியை நம்பி தபால் நிலையத்தில் குவிந்த மக்கள்

தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால் அவர்கள் கணக்கில் மத்திய அரசு ரூ.15 லட்சம் முதலீடு செய்யும் என்று பரவிய வதந்தியை நம்பி மூணாறு தபால் நிலையத்தில் பொதுமக்கள் குவிய தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மூணாறு தபால் நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்.
மூணாறு தபால் நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்.
Published on

அரசின் நலத்திட்டங்கள் பற்றியும், பொதுமக்களின் வங்கிக்கணக்கில் அரசு பணம் போடுவது பற்றியும், அடிக்கடி வதந்தி கிளம்புவது வழக்கம்.

இந்த வதந்திகளை நம்பி பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் திரளுவதும், அவர்களை அதிகாரிகள் விளக்கமளித்து திருப்பி அனுப்புவதும் நடந்து வருகிறது. இதைபோல கேரளாவில் உள்ள மூணாறு பகுதியில் ஒரு வதந்தி பரவியது

தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால் அவர்கள் கணக்கில் மத்திய அரசு ரூ.15 லட்சம் முதலீடு செய்யும் என்று பரவிய வதந்தியை நம்பி மூணாறு தபால் நிலையத்தில் பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள்.

நேரம் செல்ல செல்ல ஆண்களும், பெண்களும் திரண்டதால் தபால் ஊழியர்கள் திணறத் தொடங்கினார்கள்.

இதனால் அங்கு காலை முதல் பரபரப்பு நிலவியது. இதுபற்றி தபால் ஊழியர் ஒருவர் கூறும்போது, ரூ.100 பணம் டெபாசிட் செய்து பொதுமக்கள் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கினால் கியூஆர் கோடு இடம் பெற்ற ஸ்மாட் கார்டு அவர்களுக்கு வழங்கப்படும்.

இதன் மூலம் ரூ.1 லட்சம் வரை தங்கள் கணக்கில் பொதுமக்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம். இதைதான் தவறுதலாக பொதுமக்கள் புரிந்துகொண்டு வதந்தியை நம்பி கணக்கு தொடங்கி உள்ளனர் என்றார்.

இதேபோல மூணாறு அருகே உள்ள தேவிக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்தால் இலவச வீடு, நிலம் வழங்கப்படும் என்றும் வதந்தி பரவியது. இதை நம்பியும் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com