

குளச்சல்:
குளச்சல் நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இன்று குளச்சல் காமராஜர் பஸ்நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் போராட்டத்தை யொட்டி மாட்டு இறைச்சியை சமைத்து காங்கிரசார் சம்பவ இடத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அந்த இறைச்சியை சாப்பிட்டு மாட்டுக்கறி விருந்து நடத்தவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் குளச்சல் போலீஸ் ஏ.எஸ்.பி. சாய்சரண்தேஜஸ்வி மற்றும் குளச்சல் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தமட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாட்டுக்கறி விருந்து நடத்தக் கூடாது என்று கூறி தடை விதித்தனர். இதனால் பர பரப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு போலீசாரின் அறிவுரையை ஏற்று கண்டன ஆர்ப்பாட்டம் மட்டும் நடைபெற்றது. நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல்ரகீம் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் யூசுப்கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாகீர்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், நகர காங்கிரஸ் தலைவர் சபீன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் மேரிஹெலன் அந்திரேயா, மேரி ஸ்டெல்லா, நிர்வாகிகள் முனாப், சேகர், ஸ்டீபன், பிரான்சிஸ், சுமன், மாவட்ட சேவாதள தலைவர் ஜெனித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.