

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் இறுதி தீர்ப்பை வெளியிட்டது. அதில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்தும், கர்நாடகத்திற்கு கூடுதலாக தண்ணீர் எடுக்கவும் உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வளத்துறை அழைப்பு விடுத்துள்ளது. 4 மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகளும் 9-ம் தேதி டெல்லி வரும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அழைத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.