சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடங்கியது - தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில் 57 ஆயிரத்து 500 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடங்கியது - தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்
Published on

இந்தியா முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்ததும் காலை 10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது. விடைத்தாளை படித்துப் பார்த்து முதல் பக்கத்தை நிரப்ப 15 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் வினாத்தாள் வழங்கப்பட்டது. அதனை படித்துப் பார்த்து தேர்வுக்கு தயாராக 15 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்து.

அதன் பின்னர் 10.30 மணிக்கு மணி அடித்ததும் மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கினர். தேர்வு காலம் 2 மணி 30 நிமிடம். தேர்வு முடியும் வரை (1.00 மணி) மாணவர்கள் தேர்வு அறையில் இருந்து வெளியேற அனுமதி இல்லை.

நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக இந்தியாவில் 4 ஆயிரத்து 453 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வெளிநாடுகளில் 78 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

12-ம் வகுப்பு தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வை எழுத 4 ஆயிரத்து 138 மையங்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர வெளிநாடுகளில் 71 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் 10-ம் வகுப்பு தேர்வை 4 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளிகளும், 12-ம் வகுப்பு தேர்வை 2 ஆயிரத்து 846 மாற்றுத்திறனாளிகளும் எழுதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வை 41 ஆயிரம் பேரும், 12-ம் வகுப்பு தேர்வை 16 ஆயிரத்து 500 பேரும் என மொத்தம் 57 ஆயிரத்து 500 பேர் எழுதுகிறார்கள். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

10-ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி வரை நடக்கிறது. இதேபோல் 12-ம் வகுப்பு தேர்வுகள் இன்று முதல் ஏப்ரல் 12-ந்தேதி வரை நடக்கிறது.

மாணவர்கள் இந்த தேர்வில்  சிறந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெற பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிபிஎஸ்இ சார்பில் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. பாடவாரியாக ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com