

சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்கும் படி அக்கட்சித் தலைவர்கள் கோரினர். இதுகுறித்து பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் விவாதித்து தமிழகத்திற்கு நன்மை அளிக்கும் முடிவை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பை வழங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளும், 5 மாதங்களும் நிறைவடைந்து விட்டன. ஆனாலும், அத்தீர்ப்பைச் செயல் படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரை அமைக்கப்படவில்லை. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏழரை ஆண்டுகளும், இப்போதைய ஆட்சியில் மூன்று ஆண்டுகளும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த 4 நாட்களில் அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை செயல்படுத்த ஒப்புக்கொண்ட மத்திய அரசு, கர்நாடகத்தின் அழுத்தத்திற்கு பணிந்து அடுத்த 3 நாட்களில் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு ஆணையிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து விட்டனர்.
இத்தகைய சூழலில் அடுத்த ஒரு மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று பாரதிய ஜனதா தலைமை அறிவித்தால் அதையேற்று அக்கட்சியின் வேட்பாளருக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கும்; இல்லையேல் குடியரசுத் தலைவர் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி புறக்கணிக்கும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.