சக்திமான் குதிரையின் இறப்புக்கு காரணமான பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீதான வழக்கு வாபஸ்

உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் குதிரை சக்திமானின் காலை உடைத்து அதன் இறப்புக்கு காரணமான எம்.எல்.ஏ. மீதான வழக்கை பா.ஜ.க. அரசு வாபஸ் பெற்றுள்ளது.
சக்திமான் குதிரையின் இறப்புக்கு காரணமான பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீதான வழக்கு வாபஸ்
Published on

ஹரிஷ் ராவத் தலைமையிலான உத்தரகாண்ட மாநில அரசை கண்டித்து டேராடூன் நகரில் சட்டசபை அருகில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை அடக்க போலீசார் முயன்றனர். அப்போது, கலவர தடுப்பு சிறப்புப் படையை சேர்ந்த போலீஸ் குதிரை சக்திமானின் கால்களில் கணேஷ் ஜோஷி என்ற பாரதிய ஜனதா கட்சியின் முசோரி தொகுதி எம்.எல்.ஏ. தொடர்ந்து தடியால் தாக்கினார்.

இதனால்  சக்திமான் குதிரையின் இடது பின்னங்கால் உடைந்தது. இச்சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர் ஹரிஷ் ராவத்தின் உத்தரவின் பேரில் குதிரைக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு, செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த குதிரை இறந்து போனது. போலீஸ் துறையில் 14 ஆண்டுகள் சேவையாற்றியிருந்த அந்த குதிரையின் உடல் முழு போலீஸ் மரியாதையுடன் அடக்கம்  செய்யப்பட்டது.

போலீஸ் குதிரையை தாக்கி அதன் இறப்புக்கு காரணமான கணேஷ் ஜோஷி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஜோஷி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

சமீபத்தில் உத்தரகாண்ட் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலின் எதிரொலியாக அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கணேஷ் ஜோஷிக்கு எதிரான வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நோக்கத்தில் முந்தைய அரசால் தொடரப்பட்டதால் இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக தற்போதையை பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உத்தரகாண்ட் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரியும் அரசின் செய்தி தொடர்பாளருமான மதன் கவுஷிக், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கணேஷ் ஜோஷி மற்றும் சமூக நன்மைக்காக போராடிய சில பா.ஜ.க.வினர் மீது தவறாக பதிவு செய்த அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com