நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்த்து வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை

நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆவணங்களை அட்டர்னி ஜெனரலிடம் சமர்பிப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்த்து வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை
Published on

அ.தி.மு.க. பிளவுபட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. சசிகலா சிறையில் இருப்பதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியை முன்னெடுத்து நடத்தி செல்கிறார்.

இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வருவதால் தேர்தல் கமி‌ஷனால் சின்னம் முடக்கப்பட்டு உள்ளது.

இதனால் யார் பக்கம் தொண்டர்கள் நிர்வாகிகள் உள்ளனர் என்பதை நிரூபிக்க தேர்தல் கமி‌ஷனில் இரு தரப்பினரும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் ஆதரவாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, செம்மலை, நத்தம் விசுவநாதன், பொன்னையன், பி.எச்.பாண்டியன், ஜெயபால், சண்முகநாதன், ஜே.சி.டி.பிரபாகர், பாண்டியராஜன், சின்னராஜ், மனோரஞ்சிதம், மாணிக்கம், மனோகரன், சரவணன் உள்பட 10 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.

அவைத்தலைவர் மதுசூதனன் வெளியூரில் உள்ளதால் பங்கேற்கவில்லை. ஆறுகுட்டி எம்.எல்.ஏ. குலதெய்வம் பூஜையில் பங்கேற்க சொந்த ஊருக்கு சென்றிருந்ததால் கலந்து கொள்ளவில்லை.

இவர்களை தவிர மற்றவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அவர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இதை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கு தொடர்பாக அட்டர்னி ஜெனரல் 11-ந் தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அட்டர்னி ஜெனரலிடம் சமர்பிப்பது தொடர்பாக நேற்று ஆலோசனை நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மேலும் சிறப்பாக நடத்துவது குறித்தும், சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் என்னென்ன மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டும் என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக செம்மலை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com