

மான்ட்ரியல் :
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 7-வது சுற்றான கனடா கிரான்ட்பிரி பந்தயம், மான்ட்ரியல் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 305.27 கிலோ மீட்டர் தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.
இதில் 3 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) பந்தய தூரத்தை 1 மணி 33 நிமிடம் 05.154 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்தார். முதலிடம் பிடித்த அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தன. ஒட்டுமொத்தத்தில் ஹாமில்டன் பெற்ற 56-வது வெற்றி இதுவாகும். கனடா கிராண்ட்பிரி பந்தயத்தில் அவர் பெற்ற 6-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்லாந்து வீரர் வால்ட்டெரி பாட்டஸ் (மெர்சிடஸ்) 19.783 வினாடிகள் பின்தங்கி 2-வது இடத்தை பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிச்சர்டோ (ரெட்புல்) 3-வது இடம் பிடித்தார். 4 முறை சாம்பியனான ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) முறையே 5-வது, 6-வது இடங்களை பெற்றனர். 7 சுற்றுகள் முடிவில் செபாஸ்டியன் வெட்டல் 149 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லீவிஸ் ஹாமில்டன் 129 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 8-வது சுற்று போட்டி அஜர்பைஜானில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.