நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க முடியாது: புதுவை சட்டசபை செயலகம் தகவல்

புதுவை நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் எதுவும் இப்போது வழங்க முடியாது என்று சட்டசபை செயலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க முடியாது: புதுவை சட்டசபை செயலகம் தகவல்
Published on

புதுச்சேரி:

புதுவை சட்டமன்றத்துக்கு மாநில அரசின் பரிந்துரையின் பேரில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்ய முடியும்.

புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவித்தது.

இது தொடர்பான உத்தரவு ஜூலை மாதம் 4-ந் தேதி புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து கவர்னர் கிரண்பேடி 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

ஆனால், நியமன எம்.எல்.ஏ.க்களை ஏற்க புதுவை சட்டமன்ற சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார். அதிகாரம் படைத்த உரிய நபரிடம் இருந்து தனக்கு எந்த உத்தரவும் வராததால் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ஏற்க முடியாது என சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார். அதோடு கடந்த மாதம் நடந்த சட்டமன்ற குளிர்கால கூட்டத்திலும் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு தன்னிச்சையாக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதே நேரத்தில் தங்களை சட்டமன்றத்தில் அனுமதித்து எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகளை வழங்க வேண்டும் என 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வருகிறது. இந்த வழக்கில் வாதம், பிரதிவாதம் முடிந்துள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டசபை செயலாளருக்கு புதுவை அரசின் சார்பு செயலாளர் கண்ணன் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து அறிவித்தது.

இதற்கான அறிவிப்பு அரசிதழிலும் வெளியானது. கடந்த 21.11.2017 அன்று உள்துறையில் இருந்து இது தொடர்பாக உத்தரவு வந்துள்ளது. மேலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டில் தடை ஏதும் இல்லை.

நியமன எம்.எல்.ஏ.க் களை ஏற்பதா? இல்லையா? என்பதை சபாநாயகர் முடிவு செய்ய முடியாது. எனவே, நியமன எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நியமன எம்.எல். ஏ.க்களுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கவும் உள்ளாட்சித் துறை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரும் சட்டசபைக்கு வந்தனர். அவர்கள் சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரை சந்தித்தனர்.

அப்போது அரசு சார்பு செயலாளர் கண்ணன் பிறப்பித்த உத்தரவை சட்டசபை செயலாளரிடம் காட்டி எங்களுக்கு எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள், தொகுதி வளர்ச்சி நிதி ஆகியவற்றை ஒதுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு சட்டசபை செயலாளர் இது சம்மந்தமாக உரிய நபர்களிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அவர்களிடம் கூறினார்.

பின்னர் வெளியே வந்த சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியை விட உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்கள் இந்த நாட்டில் யாரும் இல்லை. எனவே ஜனாதிபதியின் உத்தரவை மதிக்க வேண்டும். ஆனால் முதல்-அமைச்சரும், சபாநாயகரும் வேண்டும் என்றே திட்டமிட்டு எங்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள். மக்கள் நலனை புறக்கணிக்கிறார்கள்.

அவர்கள் உள்கட்சி சண்டையில் சிக்கி இருக்கிறார்கள். நாராயணசாமியை பழிவாங்கும் வகையில் சபாநாயகர் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுசம்மந்தமாக சபாநாயகரிடம் கேட்டபோது கோர்ட்டில் வழக்கு இருப்பதால் இதுபற்றி நான் எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார்.

சட்டசபை செயலக அதிகாரிகளிடம் கேட்ட போது, 3 நியமன எம்.எல்.ஏ.க்களை ஏற்க மறுத்து சபாநாயகர் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இது சம்பந்தமாக ஐகோர்ட்டு எந்த தடையும் விதிக்கவில்லை. சபாநாயகரின் உத்தரவு அப்படியே இருக்கிறது. எனவே நியமன எம்.எல்.ஏ.க் களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் எதுவும் இப்போது வழங்க முடியாது என்று கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com