நெல்லை அருகே அரசு பஸ்-பைக் மோதல்- கூட்டுறவு வங்கி ஊழியர்-சிறுவன் பலி

நெல்லை அருகே அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர் மற்றும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை அருகே அரசு பஸ்-பைக் மோதல்- கூட்டுறவு வங்கி ஊழியர்-சிறுவன் பலி
Published on

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நாடார் தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 30). இவர் வீரபாண்டிய பட்டினத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது அக்காள் ரத்னகலா(35). இவர் தனது கணவர் சந்திரசேகருடன் நாமக்கல்லில் வசித்து வந்தார்.

ஏரலில் உள்ள பெற்றோரை பார்ப்பதற்காக ரத்னகலா தனது மகன் சச்சின் (7) என்பவரை அழைத்துக்கொண்டு பஸ்சில் இன்று காலை நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து அவர்களை கணேஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஏரலுக்கு அழைத்துச் சென்றார்.

பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் புவியியல் மையம் அருகே சென்றபோது, கணேஷ்குமார் முன்னால் ஆத்தூரை நோக்கி சென்ற அரசு பஸ்சை முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிரே மற்றொரு அரசு பஸ் வந்ததால் கணேஷ்குமார், முந்திச்செல்லாமல் அரசு பஸ்சுக்கு பின்னால் செல்ல முயன்றார். ஆனால் அவரது மோட்டார்சைக்கிள் அரசு பஸ்சின் பின்பகுதியில் மோதி கீழே விழுந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட கணேஷ்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ரத்னகலாவும், அவரது மகன் சச்சினும் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடினார்கள். உடனடியாக அவர்களை பஸ்சில் வந்தவர்கள் மீட்டு, நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் சச்சின் பரிதாபமாக இறந்தான்.

ரத்னகலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் ஏமன்குளத்தை சேர்ந்த ராபின்சன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com