திண்டுக்கல்லில் ஒருநாள் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்காத பஸ் நிலைய வணிக வளாக கட்டிடம்

திண்டுக்கல்லில், ஒருநாள் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட புதிய வணிக வளாக கட்டிடத்துக்குள் தண்ணீர் வழிந்தது. திறப்பு விழா காண்பதற்கு முன்பே அந்த கட்டிடம் தண்ணீர் தொட்டி போல் மாறியது.
வணிக வளாக கட்டிடத்தில் ஓட்டை விழுந்துள்ளதால், கட்டிடத்தின் உள்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி.
வணிக வளாக கட்டிடத்தில் ஓட்டை விழுந்துள்ளதால், கட்டிடத்தின் உள்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் பஸ் நிலையத்தை ரூ.5½ கோடியில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பஸ் நிலைய வளாகத்தில் சாலை அமைப்பது, வணிக வளாக கட்டிடங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடத்தில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் திண்டுக்கல்லில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால், ஒரு கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான துளைகள் ஏற்பட்டன.

அதன் வழியாக மழைநீர் கட்டிடத்துக்குள் வழிந்தோட தொடங்கியது. சிறிது நேரத்திலேயே கட்டிடத்தின் அடிப்பாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்துக்குள் தண்ணீர் கொட்டத்தொடங்கியது. இதன் காரணமாக அந்த இடமே, தண்ணீர் தொட்டி போல் மாறியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வணிக வளாக கட்டிடம் ஒருநாள் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் கட்டிடத்துக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. இன்னும் இந்த கட்டிடம் திறப்பு விழாவே காணவில்லை. அதற்குள் தண்ணீர் ஒழுகுவது கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த கேள்வியை எழுப்புகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com