

புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதியின் வருகைக்கு 20 நிமிடங்கள் முன்னதாகவே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பாராளுமன்ற மக்களவைக்குள் நுழைந்தார்.
ஜனாதிபதியை வரவேற்கும் பரபரப்பான நேரத்தில் ஜனாதிபதி உள்ளே நுழைவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவைக்குள் நுழைந்தார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது உரையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டபோது இரு அவைகளில் இருந்த எம்.பி.க்கள் கரவொலி எழுப்பியும், மேஜையை தட்டியும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், இதில் எல்லாம் அக்கறை செலுத்தாத காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருந்ததாக டெல்லி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், ஜனாதிபதி பேசி முடித்ததும் அனைத்து உறுப்பினர்களும் ஒருசேர கரவொலி எழுப்பியும், மேஜையை தட்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சோனியா காந்தியும் இறுதியில் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தார். ஆனால், ராகுல் காந்தி இறுதிவரை கரவொலி கூட எழுப்பவில்லை என தெரிகிறது.
அதுமட்டுமின்றி, உரையாற்றி முடித்த ஜனாதிபதி பாராளுமன்ற மத்திய மண்டபத்தில் இருந்து வெளியேறுவதற்குள் தனது இருக்கையில் இருந்து எழுந்த ராகுல் காந்தி தன்னை சூழ்ந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி.க்களுடன் பேசியதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. #tamilnews